
Valparai - a set on Flickr
Myself a jovial & a creative design addict. Interest to learn new creatives & finding the easier way to implement it. Love to hear some melodies before my sleep. Love to ride vehicle when our sky starts to cry.
Music video by Young Artists For Haiti performing Wavin' Flag. (C) 2010 Universal Music Canada Inc.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?
கோடியிwadadaassல் ஒருவர் - 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.
தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.
இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.
கோடியில் ஒருவர் - 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்கள “அய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!”.
“இந்த மரம் வளர்த்துறாரே” என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்”
ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.
சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.
அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.
இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.
ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.
இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.
எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
Source: அன்பேசிவம்